'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jan 13, 2020 09:26 AM
போதை மாத்திரை வாங்குவதற்காக ஐடி ஊழியரை கொடூரமாக தாக்கி அவரின் செல்போனை சிறுவர்கள் பறித்து சென்றுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் கடந்த 10ம் தேதி ராகேஷ் என்ற ஐடி ஊழியரை கடுமையாக தாக்கி, ஒரு கும்பல் செல்போனை பறித்து கொண்டு சென்றது. இது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கும்பலை விரைந்து கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த கும்பல் திநகர் பகுதியிலும் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
அந்த கும்பல் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்த சூழ்நிலையில் அந்த கும்பல் தற்போது டிக்டாக் மூலம் சிக்கியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 9 பேர் கொண்ட சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் எதற்காக வழிப்பறியில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அதில், ''வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் போதை மாத்திரைக்கு அடிமையானவர்கள். போதை மாத்திரை வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். 9 பேரும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். செல்போன் பறிப்பில் ஈடுபடும் இவர்கள், அதன் மூலம் கிடைக்கும் செல்போன்களை கடைகளில் விற்று, அந்த பணத்தில் போதை மாத்திரைகள் வங்கியுள்ளதாக'' வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்கள்.
சிறுவர்கள் இது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களின் வாழ்க்கையை தொலைப்பதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.