கோவில் திருவிழாவில் விநோதம்.. துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 02, 2019 11:40 AM
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில், துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது மறவப்பட்டி கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று, சேற்றில் துடைப்பத்தை நனைத்து பக்தர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கோவில் வளாகத்தின் முன்பு தேங்கியிருந்த சேற்றில் துடைப்பத்தை நனைத்து, பக்தர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். சேற்றில் படுத்து உடல் முழுவதும் சேறு அப்பிக்கிடக்கின்றபோது தங்களின் உறவினர்களை அழைத்து, துடைப்பத்தால் அடிவாங்கிக்கொள்ளும் நிகழ்வும் நடந்தது. இந்த திருவிழாவைக் காண அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மறவப்பட்டிக்கு படையெடுத்துவந்தனர்.
இந்த வினோத நிகழ்ச்சி குறித்து பக்தர்கள் கூறுகையில், 'பொதுவாக கோவில் திருவிழாக்களின் போது, உறவினர்கள், முறை மாமன்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி விளையாடுவது வழக்கம். ஆனால் எங்கள் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சேறு மற்றும் கழிவுநீரில் நனைத்து துடைப்பத்தால் ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொள்கிறோம்'.
'இவ்வாறு செய்வதால் எங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள், கவலைகள் நீங்கி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். மேலும் நீண்டநாட்கள் பிரிந்திருக்கும் உறவினர்கள் மீது திருவிழாவின் போது துடைப்பத்தால் அடித்தால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு மலரும் என்பது எங்களின் நம்பிக்கை' என்றனர்.
மாமன், மச்சான்களை அடித்துக்கொள்ளும் பக்தர்கள், இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை காண வரும் மற்ற ஊர்காரர்களை, துடைப்பத்தால் அடிப்பதில்லை. மேலும் அவர்களை அன்புடனும், மரியாதையுடன் நடத்தி விருந்தளித்து மகிழ்கின்றனர்.
