'6 ஆயிரம் கடனுக்காக 6 வருடமாக கொத்தடிமைத்தனம்.. 7 குடும்பங்கள் மீட்பு'.. பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 29, 2019 02:20 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டிருந்த அடிமைச் சங்கிலி முறை பலரையும் பதைபதைப்பை உருவாக்கியுள்ளது. அதுவும் 6 ஆயிரம் ரூபாய்க்காக இப்படி நடந்துள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN - family kept as slave for 6 years for 6 thousand rupees loan

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மரம் வெட்டும் தொழில் நடத்தி வந்த முருகனிடம், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் 6 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் அந்த 6 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கட்டுவதற்காக மாதம் தலைக்கு 150 ரூபாய் சம்பளத்துக்காக ராஜேந்திரனின் மொத்த குடும்பத்தினரும் கொத்தடிமைகளாக வேலை பார்க்க வைக்கப்பட்டனர்.

இப்படி 6 ஆயிரம் ரூபாயை திருப்பி கட்டுவதற்கு வேலை செய்து கழிக்கும் முறையில் வேலை பார்த்த ராஜேந்திரன் குடும்பத்தினர் இழிவாகவும், கடுமையாகவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதனிடையே வாங்கிய கடனுக்கு வட்டியும் ஏறிக்கொண்டே சென்றதால், வேலை மட்டுமே செய்ய வேண்டிய நிலை ராஜேந்திரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உருவாகியது.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம், ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் மகாபலிபுரம் அருகே ராஜேந்திரனின் குடும்பத்தினரை கண்டுபிடித்து முருகன் தாக்கியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் தலையிட்டு, ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தினரையும் மீட்க உதவியுள்ளனர்.

கொத்தடிமை மீட்பு சங்க நிர்வாகத்தின் உதவியுடன் இன்னும் 7 குடும்பங்கள், அவரவர் குழந்தைகளுடன் சேர்த்து மீட்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 28 நபர்களை 6 வருடங்களாக கொத்தடிமைகளாக வைத்திருந்த முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கன மறுவாழ்வு அளிக்கப்படுவதாகவும் துணை ஆட்சியர் கூறியுள்ளார்.

Tags : #BIZARRE #FAMILY #SLAVE