“டூவீலர் ஓட்டும் மக்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்"!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Apr 25, 2019 11:25 AM

சாலையில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்தி, நூதன கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

the person who involved in different way of robbery got arrested

மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் நேற்று (24/04/2019) அதிகாலை பணி முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் சாலையின் நடுவில் இருந்த கல்லை கவனிக்காததால், அவரது இருசக்கர வாகனம் கல் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய பாஸ்கரன், கீழே விழுந்து விபத்திற்குள்ளானார். கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த மருத்துவமனையில் பாஸ்கரன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாஸ்கரன் சென்ற வழியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை,  ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில், பாஸ்கரன் விபத்துக்குள்ளான சிறிது நேரத்துக்கு முன்னர், சாலையின் நடுவில் மர்ம நபர் ஒருவர் பெரிய கல்லை வைத்துவிட்டு, அருகில் மறைந்துக்கொள்கிறார்.

பின்னர் அந்த வழியாக வந்த டெம்போ வேன் ஓட்டுநர் ஒருவர், சாலையில் இருக்கும் கல்லைக் காண்கிறார். வேனிலிருந்து கீழே இறங்கி, அந்தக் கல்லை ஓட்டுநர்   அப்புறப்படுத்துகிறார். இதனைக் கண்டு திகைத்த மர்ம நபர், அந்த வேன் ஓட்டுநரிடம் சண்டையிட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதேபோல், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பாஸ்கரன், அந்த கல் மீது மோதி,  கீழே விழுகிறார். அவர் விழுந்ததும் ஓடிச் சென்று, அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை, அந்த மர்மநபர் திருடும் காட்சிகளும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, போலீசார் வாகன விபத்தை கொலை வழக்காக பதிவுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைதான நபர் தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜாவின் கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா? இது போன்ற வேறு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பாஸ்கரனின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : #TN #ROBBERY #ROAD #VEHICLE #BIZARRE