'போன் விலை ரூ.33 ஆயிரம்.. தொலைச்சதுனால ரூ.4 லட்சம்'.. ஊழியரால் கம்பெனிக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | Apr 25, 2019 05:57 PM
ஒரு மொபைல் போனைத் தொலைப்பதனால் என்ன? கிடைக்கவில்லை என்றால் சில நாட்கள் வருத்தப்பட்டுவிட்டு அடுத்த போனை வாங்கிவிடுவோம்.

ஆனால் அது 30, 40 ஆயிரம் ரூபாய் என்றால் அதிகபட்சமாக பரவாயில்லை. அந்த போனின் விலை 33 ஆயிரம் ரூபாயாக இருக்கும் போது, அதை தொலைந்த பின்பு அதன் விலை 4 லட்ச ரூபாயாக மாறியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அப்படி என்ன மொபைல் தொலைந்து போனத் என்கிற கேள்வி எழுகிறதா?
அந்த நபர் தொலைத்தது ஒரு புரோட்டோடைப் மொபைல். அதாவது முன் தயாரிப்பு மாடல் மொபைல். பொதுவாக தயாரிப்பு நிறுவனங்கள் பலவும், தாங்கள் உற்பத்திச் செய்யவிருக்கும் பொருளுக்கு முன்னதாக ஒரு சாம்பிள் பொருளை உருவாக்குவதுண்டு. அதனை பயன்படுத்திவிட்டு அதன் குணநலன்களையும் குறைகளையும் ஆராய்ந்து பின்னர், அவற்றை வைத்து புதிய பொருளை தயாரிப்பர்.
அப்படித்தான் ஹானர் என்கிற நிறுவனம், உருவாக்கியிருக்கும் போனை, சோதனை பர்ப்பஸ்க்காக ஹானர் நிறுவனம் தமது ஊழியரான மோரிட்ஸிடம் கொடுத்திருந்தது. மோரிட்ஸ் கடந்த 22ம் தேதி ஜெர்மனிக்கு சென்றபோது, மொபைல் காணாமல் போனதை உணர்ந்துள்ளார். பெரும் தவிப்புக்கு ஆளான மோரிட்ஸ் ஒருவழியாக தனது மேலதிகாரிகளுக்கு தகவல் கூறியுள்ளார்.
மேலிடம் அவரை காட்டு காட்டுவென காட்டியிருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள அந்த மொபைலின் ரகசியங்களும், சூத்திரங்களும் யாரேனும் டெக்கி ஒருவரின் கையில் கிடைத்தால் அவ்வளவுதான். இதனால், அந்த மொபைலை எங்கேனும் பார்த்தால் கொண்டுவந்து தருபவர்களுக்கு 5000 யூரோ, அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.
