“படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!’.. ‘கேள்விப்பட்டதும் நடிகை செய்த காரியம்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலம், புரி மாவட்டம் காரடிபிதா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ரோஜி பெகேரா என்பவர் தனியார் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு டிப்ளமோ சிவில் இஞ்சினியர் படிப்பை நிறைவு செய்தார்.

எனினும் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணத்தில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்த முடியவில்லை என்றும் அதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவருக்கு வழங்க வேண்டிய கல்வி சான்றிதழை வழங்கவில்லை என்றும் தெரிகிறது. இவருக்கு 4 தங்கைகள் உள்ள நிலையில், ஒரு தங்கை பி.டெக் படித்து வருகிறார். மற்றொரு தங்கை பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள்.
இவர்கள் மூன்று பேரும் தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து தொழிலாளிகளாக பணிபுரிகின்றனர். தினமும் மூன்று பேருக்கும் தலா 207 ரூபாய் ஊதியம் கிடைப்பதாகவும் இந்த பணத்தை சேர்த்து வைத்து தனது கல்வி கட்டணத்தை திட்டமிட்ட செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் ரோஜி பெகேரா.
இதுபற்றி பேசிய அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தங்கள் குடும்பத்தில் தன்னுடன் சேர்த்து 5 மகள்கள் இருப்பதாகவும் சொந்தமாக விவசாய நிலம், வீடு இல்லாத நிலையில் தாய் தந்தையர் கூலி வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தானும் தன் தங்கையும் படித்து முன்னேற விரும்பிய நிலையில் 2019-ஆம் ஆண்டிலேயே டிப்ளமோ படிப்பை நிறைவுசெய்து விட்ட தன்னால் தனது முழு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றும், அதனால் தனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் ரோஜி பெகேரா.
அதனால் தான் இப்படி 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பணம் சேர்த்து சான்றிதழை வாங்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
இதனை அடுத்து திரைப்பட நடிகை ராணி பாண்டா, “கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக ரோஜி பெகேரா செய்து வரும் செயலை அறிந்து அவரின் வங்கிக் கணக்குக்கு 25 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளேன். அவர் மேற்படிப்பை தொடரவும். உதவி செய்வேன்.” என்றும் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
