'அமெரிக்கா போனாலும் படிச்ச பள்ளியை எப்படி மறக்க முடியும்'... '1.5 கோடி நிதியுதவி'... நெகிழ்ந்து போன விழுப்புரம் பள்ளி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒருவர் வருங்காலத்தில் என்னவாக ஆகப் போகிறார்கள் என்பதின் முதல் படியாக அவரது பள்ளி வாழ்க்கை அமைகிறது. அப்படி அதனைக் கடந்து, கல்லூரி கல்வி பயின்று, தனது கனவுகளை எட்டிப் பிடித்த நபர் ஒருவர், தான் படித்த பள்ளியை மறக்காமல் அதற்காக செய்த செயல் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பெஞ்சமின். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். பெஞ்சமின் அமெரிக்காவில் பணியாற்றி வந்தாலும், தனது கிராமத்தின் மீதான நினைப்பு மாறாமல் இருந்து வந்துள்ளது. இதனால், தனது கிராமத்திற்கும், தான் படித்த பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென பெஞ்சமின் நினைத்துள்ளார். அதன்படி, நண்பர்களுடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் 8 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்ததுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
இது போக, இன்னொரு பக்கம் கடந்த 15 ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பழங்குடியினப் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். இது தொடர்பாக, அமெரிக்காவில் இருந்து கொண்டே 'இந்து தமிழ்' நாளிதழிற்கு பேட்டி ஒன்றை பெஞ்சமின் அளித்துள்ளார். 'நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கக்கனூர் கிராமம் தான். எனது பள்ளி, கல்லூரி படிப்பு அனைத்தையும் 1970 களில் அரசு கல்வி நிறுவனங்களில் தான் முடித்தேன்.
அந்த காலத்தில் வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக, ஏராளமான மாணவர்கள் 8 ஆம் வகுப்பைக் கூட தாண்டியதில்லை. இதுகுறித்து பின்னாட்களில் யோசிக்க ஆரம்பித்தேன். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையின் கிராமத்தில் இருந்த எனக்கு, அமெரிக்க அரசாங்க வேலையை எனது கல்வி தான் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால், எனது கிராம குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருப்பதால் வெள்ளை, கறுப்பின, ஸ்பானிய நண்பர்கள் எனக்கு அதிகமுள்ளனர்.
அவர்களின் உதவியுடன் ஒன்றரை கோடி ரூபாய் திரட்டி கக்கனூர் பள்ளிக்கு நிதி அளித்தேன். இதில், என்னுடைய பங்கு 60 லட்சம் ஆகும். திருமணம் செய்து கொள்ளாததால் என்னால் அதிக நிதி அளிக்க முடிந்தது. கல்வியே இங்கு அனைத்து காரியங்களையும் மாற்றியமைக்கும்' என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் இரண்டு தளங்களில் எட்டு வகுப்பறைகள் கொண்ட நவீனமான கட்டிடங்கள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், 3 நவீன கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
