9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி பாஸ்.. முதல்வர் பழனிசாமி ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘2020-21ம் கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டில் (2020-2021) 9,10,11-ம் வகுப்பு மாணாக்கர்கள் முழு ஆண்டு தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி! pic.twitter.com/APCVfIgedw
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 25, 2021
மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும்’ என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
