பாஜகவில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.. பரபரக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா பாஜகவில் இணைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசோக் திண்டா நேற்று பாஜகவில் இணைந்தார்.
மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மற்றும் மேற்கு வங்க பாஜக துணைத்தலைவர் அர்ஜூன் சிங் ஆகியோர் முன்னிலையில், அசோக் திண்டா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
முன்னதாக நேற்று மேற்கு வங்கத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசோக் திண்டா பாஜகவில் இணைந்திருப்பது அங்குள்ள அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.