'நேத்து நைட் வரை இப்டிதான் நெனைச்சேன்'.. 'இதுக்காகத்தான் கடத்துனாங்க'.. முகிலன் பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 08, 2019 04:36 PM
சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக காணாமல் போனார். அதன் பின்னர் முகிலனைக் கண்டுபிடிக்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கண்டுபிடிக்க, ஆட்கொணர்வு வழக்கு நீதிமன்றத்தில் போடப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி, முகிலனை விரைவில் கண்டுபிடிக்கவுள்ளதாகக் கூறினர்.
இந்த நிலையில்தான் திருப்பதி ரயில் நிலையத்தில், 'தமிழ்நாட்டை அழிக்காதே, கூடங்குளத்தில் அணு உலையைத் தடை செய்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடியே இருந்த முகிலனை, ஆந்திரப் போலீஸார் அழைத்துச் சென்ற வீடியோ இணையதளத்தில் வெளியானது. அதற்கும் முன்பாக ரயில் என்ஜினுக்கு முன் அமர்ந்தபடி கோஷமெழுப்பிக் கொண்டிருந்தார் முகிலன்.
கடைசியில் ஆந்திர போலீஸாரிடம் இருந்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முகிலன், காட்பாடிக்கு அழைத்துவரப்பட்டு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது முகிலனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு கணுக்காலில் நாய் கடித்துள்ளதும், சர்க்கரை நோய் அதிகரித்துள்ளதும், இன்று அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த சூழலில், சில முக்கிய விபரங்களை பத்திரிகையாளர்களிடம் முகிலன் கூறியுள்ளார். அதில், 32 முறை தன்னை காவல்துறையினர் உட்பட பலரும் தாக்கியுள்ளதாகவும், சிலர் கொல்வதற்கு முயற்சித்துள்ளதாகவும், தான் விடுவிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து பல போராட்டங்களை ஆந்திராவில் மேற்கொண்டதாகவும், தான் இன்னும் சிபிசிஐடியின் கஸ்டடியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் சில ஐஜி, டிஐஜிக்கு எதிராகத் தொடங்கியதுதான் தன் போராட்டமென்றும், அவற்றை திசை திருப்புவதற்காக முகிலன் எங்கே என்பன போன்ற சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
கடைசியாக ரயில் நிலையத்தில் செல்லும்போது தன்னை சிலர் கடத்தியதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டங்கள் செய்யக் கூடாதென்று கூறியதாகவும், அப்போது தன் கண்ணைக் கட்டியிருந்ததாகவும், தன் மனைவி மக்கள் இறந்துவிட்டதாகச் சொல்லி அவர்கள் தன்னை நம்ப வைத்ததாகவும், நேற்றிரவுவரை தான் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றதையெல்லாம் நீதிபதியிடம் கூறவிருப்பதாகவும் முகிலன் தெரிவித்துள்ளார்.