'கொரோனா வைரஸை கண்டுபிடிக்க... நாய்களுக்கு சிறப்பு பயிற்சி!'... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை உள்ளவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு லண்டனில் விஞ்ஞானிகள் சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 22 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, பலர் சிகிச்சை பெற்று பூரணமாக குணமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, நாய்களின் மோப்ப சக்தியின் மூலம், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, நாய்களின் வாசனையை அறியும் மோப்ப சக்தி மூலம் கொரோனா வைரஸைக் கண்டறிய முடியும்.
மெடிக்கல் டிடெக்ஷன் டாக்ஸ் என்னும் நிறுவனம் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசன் (LSHTM) மற்றும் டரம் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தி வருகிறது. வடகிழக்கு இங்கிலாந்தில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களில் மலேரியா உள்ளிட்ட நோய்களை நாய் கண்டறியும் திறனை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட வாசனையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நோயின் அறிகுறியைக் கண்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 வாரங்களுக்கு நாய்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக மெடிக்கல் டிடெக்ஷன் டாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் க்ளேர் கெஸ்ட் கூறும்போது, ''நாய்களால் கண்டிப்பாக கொரோனா தொற்றைக் கண்டறிய முடியும். வைரஸ் தொற்றை எப்படிப் பாதுகாப்பாக நோயாளிகளிடம் இருந்து பெற்று, நாய்களை முகர்ந்து பார்க்க வைக்க முடியும் என்று ஆய்வு செய்து வருகிறோம்.
இதன் மூலம் கொரோனா அறிகுறி இல்லாதவர்களைக் கூட நாய்கள் மூலம் எளிதில் அடையாளம் காண முடியும். அவர்களைப் பரிசோதிக்க வேண்டுமா, இல்லையா என்று கூற முடியும்.
விமான நிலையங்களில் நாய்களை நிறுத்தி, வைரஸைச் சுமந்து வருபவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்'' என்று உறுதிபடக் கூறுகிறார்.
முன்னதாக, நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளைச் சேகரித்து மோப்ப சக்தி மூலம் புற்றுநோய், பார்க்கின்சன் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைக் கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.