'அலேக்கா வயித்துக்குள்ள வெச்சுக்கிட்டா ஒண்ணும் தெரியாது ஜி'.. சென்னை ஜவுளிக்கடையை அதிரவைத்த பெண்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 13, 2019 01:55 PM
சென்னை டி.நகரின் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடைக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கடந்த 11-ஆம் தேதி இரவு சென்று நீண்ட நேரமாக பட்டுப்புடவை எடுக்கும் பிரிவுகளில் புடவைகளை பார்த்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் புடவை வாங்காத அவர்களின் மீது சந்தேகப்பட்ட ஊழியர்கள், அவர்களை விசாரித்தனர்.
அப்போது அவர்கள் தங்களுக்குள் இந்தியில் பேசிக்கொண்டனர். இதனையடுத்து, அவர்களை கையும் களவுமாக பிடித்த ஊழியர்கள் அவர்கள் சுடிதாருக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த பாண்டிபஜார் போலீஸார் விசாரிக்கும்போது, 26 வயது முதல் 50 வயதுவரையிலான இந்த கும்பல் டெல்லியில் இருந்து கார் மூலம் பட்டுப்புடவைகளைத் திருடுவதற்காக சென்னை வந்துள்ளது தெரியவந்தது.
இதற்கு முன்னதாக 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகளை வேறு ஒரு ஷூ ரூமில் திருடிய கும்பல், அந்த புடவையை காரில் வைத்துவிட்டு, உஸ்மான் ரோட்டில் உள்ள இந்த கடையில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுப்புடவைகளைத் திருட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 6 புடவைகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றிய பாண்டிபஜார் போலீஸார், கடையின் சிசிடிவி காட்சிகளில் இந்த பெண்கள் நூதனமாக பேசிக்கொண்டே பட்டுப்புடவைகளைத் திருடி வயிற்றுப்பகுதியில் மறைக்க முயன்றதையும் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், டெல்லி சுலைமான் நகரைச் சேர்ந்த ராம்குமார் தலைமையிலான இந்த திருட்டு டீம், பல வருடங்களால இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் வாக்கு மூலம் அளித்த அந்த கும்பல், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் தங்கள் டார்கெட் என்றும், ஒரு சீசனில் வந்தால் 50 புடவைகளைத் திருடிவிட்டுதான் செல்வோம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் பெரிய கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயம் இல்லையா என்று அந்த பெண்களிடம் போலீஸார் கேட்டதற்கு, ‘சிசிடிவி கேமராக்கெல்லாம் பதற தேவயில்ல.. டோண்ட் வொரி ஜி’ என்று பதில் அளித்தார்களாம்!