legend others aadi

'காதலனுடன் சேர்ந்து சிறுமியை கடத்திய பெண்'... 'சென்னையில் நடந்த பயங்கரம்' ... பரபரப்பு வாக்குமூலம் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 19, 2019 10:23 AM

சென்னையில் சிறுமியை கடத்தி, பெற்றோரிடம் 60 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பணிப்பெண் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டார். 10 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

3 years old child kidnapped by maid and rescued in 10 hours in Chennai

சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இவர்களது வீட்டில் அம்பிகா என்ற பெண் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே நேற்று மதியம் பணிப்பெண் அம்பிகா சிறுமியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் நந்தினி பணிப்பெண்ணிடம் சிறுமியை கவனித்து கொள்ள சொல்லிவிட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து உணவு கொடுப்பதற்காக சிறுமி அன்விகாவை தேடியுள்ளார். ஆனால் பணிப்பெண் அம்பிகா மற்றும் சிறுமி இருவரையும் காணவில்லை.

இதையடுத்து வீட்டில் அருகில் உள்ள பகுதிகளில் எல்லாம் தேடியுள்ளார். ஆனால் சிறுமியை காணாததால் பதற்றத்தில் இருந்த அவருக்கு, பணிப்பெண் அம்பிகா மொபைல் போனிலிருந்து நந்தினிக்கு போன் வந்துள்ளது. அதில், பேசிய பணிப்பெண் அம்பிகா, தன்னையும் சிறுமி அன்விகாவையும் யாரோ கடத்தி விட்டார்கள் எனவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறி போனை வைத்து விட்டார். இதனை கேட்டு அதிர்ந்து போன அவர், உடனடியாக தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து அதே போனில் பேசிய நபர், இருவரையும் உயிரோடு விட வேண்டும் என்றால் 60 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளான். இதனைத்தொடர்ந்து அமைந்தகரை காவல்நிலையம் சென்ற இருவரும் சிறுமி மற்றும் பணிப்பெண் கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். உடனடியாக குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து காவல்நிலையங்களுக்கும் உஷார்படுத்தப்பட்டது.

இதையடுத்து வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் பணிப்பெண் அம்பிகாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்து வந்தனர். அப்போது அம்பிகாவின் செல்போனுக்கு தொடர்ச்சியாக மற்றொரு செல்போனில் இருந்து அழைப்பு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில் அது முகமுது கரிமுல்லா சயீத் என்ற நபருடையது என தெரியவந்தது. இதையடுத்து நெற்குன்றம் பகுதியில் இருந்த அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர்  புழலிலுள்ள கேஎப்சி நிறுவன கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

மேலும் தனது காதலி தான் அம்பிகா எனவும், வசதியான மருத்துவ தம்பதியரின் மகளை கடத்தி பணம் பறிக்க இரண்டு பேரும் திட்டமிட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவன் அளித்த தகவலின் பேரில், கோவளத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பிகாவையும் கைது செய்து, அங்கிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் சிறுமியை பாதுகாப்பாக மீட்ட தனிப்படை போலீசாருக்கு மருத்துவர்களான அருள்ராஜ் - நந்தினி தம்பதியர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் குழந்தையை கடத்தியது எப்படி என காவல்துறையினரிடம் அம்பிகா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “ சிறுமிக்கு சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் இருந்து வந்த சிறுமியிடம் வீட்டில் சப்பாத்தி செய்யவில்லை, நாம் இருவரும் வெளியே போய் சப்பாத்தி சாப்பிடலாம்” எனக்கூறி குழந்தையை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்..கடத்தலுக்கு அம்பிகா சப்பாத்தியை பயன்படுத்தியது போல், கலிமுல்லா யூ-டியூப்பை பயன்படுத்தியுள்ளார். அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்தே கடத்தலைப் பற்றி அறிந்து கொண்டதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சிறுமி கடத்தப்பட்டது முதல் விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இரவு 11 மணி வரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து ஆலோசனையில் ஈடுபட்டதுடன், சிறுமி மீட்கப்பட்ட பிறகே அங்கிருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. பணிப்பெண்ணையோ, வேலையாட்களையோ வேலைக்கு அமர்த்தும் முன்பு அவர்கள் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்காமல் வேலைக்கு அமர்த்த வேண்டாம் என காவல்துறையினர் தொடர்ச்சியாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது .

Tags : #TAMILNADUPOLICE #KIDNAPPED #CHENNAI CITY POLICE #MAID