'தமிழக காவல்துறையில் புறக்கணிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள்'...டிஜிபி ஜாங்கிட் கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 31, 2019 02:07 PM

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் தமிழக தலைமைச் செயலாளருக்கு டிஜிபி ஜாங்கிட் கடிதம் எழுதியுள்ளார்.

DGP Jangid letter to TN Chief Secretary

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்ணின் பெயரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.ஏற்கெனவே பெண்ணை தாக்கியதாக இடமாற்றம் செய்யப்பட்ட பாண்டியராஜன்,பொள்ளாச்சி விவகாரத்தை கையாண்ட விதம் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாண்டியராஜன் உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. ஜாங்கிட் எழுதியுள்ள கடிதத்தில், குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணிக்கு வந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாக கூறியுள்ளார்.15 எஸ்.பி.க்கள் 8 துணை ஆணையர்கள் என 23 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குரிய பதவிகளை வகிப்பதாகவும், அதே நேரத்தில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பல துடிப்பான இளம் அதிகாரிகள் சரியான வாய்ப்பு பெறாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளை மாநில அரசின் தேவைக்கேற்ப நியமித்தாலும்,3 மாதங்களுக்கு மேல் பணியில் தொடர மத்திய உள்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்ற விதியையும் ஜாங்கிட் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் குரூப் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தவர்களை எஸ்.பி. அல்லது துணை ஆணையர் பதவிகளில் நியமிக்கக் கூடாது எனவும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளை அந்த பதவிகளில் நியமிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.