‘தோனியை ட்ராப் பண்றதுக்கு முன்னாடி’... ‘அவருகிட்ட போய் பேசுங்க’... 'முன்னாள் அதிரடி வீரர் விருப்பம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 19, 2019 08:49 AM
தோனியை புறக்கணிப்பதற்கு முன்பு, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தொடர முடியாது என்பதை, தேர்வுக் குழுவினர் நேரடியாக அவரிடம் பேசுவதே சரியாக இருக்கும் என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்குப் பின் பிசிசிஐ நிர்வாகம், ‘இனி, தோனி 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறமாட்டார். அப்படியே எடுக்கப்பட்டாலும், போட்டியில் ஆடும் 11 வீரர்களில் அவர் இடம்பெற மாட்டார். ஒரு ஆலோசகராகவே தோனி அணியில் இடம் பெற முடியும்’ என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் துவக்க வீரர் சேவாக், ‘தோனியிடம் அவரது ஓய்வு குறித்து, இந்திய அணியின் தலைமை தேர்வுக் குழு அதிகாரி, எம்எஸ்கே பிரசாத் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதே சரியாக இருக்கும். தோனி அடுத்தடுத்து வரும் தொடர்களில் எடுக்கப்பட மாட்டார் என்பதை, அவரிடம் நேரடியாக கூறிவிட்டு, எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
இதனை அவருக்கு தெரியப்படுத்தாமல், அணியில் இருந்து புறக்கணிப்பது சரியான ஒன்றாக இருக்காது. நான் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பே, என்னிடம் கூறாமலேயே, என்னை இந்திய அணியிலிருந்து தேர்வுக்குழு புறக்கணித்து வந்தது. இது எவ்விதத்திலும் நியாயமாக இருக்காது. இந்த தவறை தற்போது உள்ள தேர்வுக்குழு தோனிக்கு செய்யக்கூடாது. அவர் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பை கட்டாயம் நினைத்து பார்க்க வேண்டும்’ என்றார்.