‘விராட் கோலி ஜென்டில்மேன் நீங்க..?’ பிரபல வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 20, 2019 06:27 PM
விராட் கோலி மாதிரி நீங்கள் ஜென்டில்மேன் இல்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸனை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 138 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த ஆட்டத்தில் இம்ரான் தாஹிர் வீசிய 38வது ஓவர் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இம்ரான் தாஹிர் வீசிய பந்து வில்லியம்ஸன் பேட்டில் பட்டு பின்னாலிருந்த விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் பிடிபட்டது.
இந்நிலையில் பேட்டில் பந்து பட்ட சத்தம் நன்றாகக் கேட்டும் டீகாக் நடுவரிடம் முறையிடவில்லை. விக்கெட் கீப்பர் முறையிடாததால் கேப்டன் டூப்பிளசிஸ் உள்ளிட்ட மற்ற வீரர்களும் அவுட் இல்லை என நினைத்து அமைதியாக இருந்தனர். ஆனால் டிவி ரீப்ளேயில் அந்த ஷாட்டைத் திரும்பப் பார்த்தபோது பேட்டில் பந்து பட்டுச் சென்றது தெளிவாகியுள்ளது. பேட்டில் பந்து பட்டதை பேட்ஸ்மேன் கண்டிப்பாக உணர்ந்திருக்கக்கூடும். அப்படி இருந்தும் வில்லியம்ஸன் ஏன் வெளியேறவில்லை என்பது தற்போது சமூக வலைத் தளங்களில் பெரிய விவாதப் பொருளாகி வருகிறது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி முகமது அமீரின் பந்தை அடிக்க முயன்றபோது அது கீப்பர் சர்பிராஸ் அகமதுவிடம் கேட்ச் ஆனது. பந்து பேட்டில் பட்டுவிட்டது என நம்பி நடுவர் அவுட் கொடுக்கும் முன்பே விராட் கோலி வெளியேறினார். பின்னர் ரீப்ளேயில் பந்து பேட்டில் படாததும், கோலி அவுட் இல்லாததும் தெரியவந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு கோலியைப் போல நீங்கள் ஜென்டில்மேன் இல்லை என வில்லியம்ஸனை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸும், “வில்லியம்ஸன் அவுட் எனத் தெரிந்த பின்பும் வெளியேறாதது ஜென்டில்மேன் செயலா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.