"மச்சான், நான் பாத்துக்குறேன் டா..." வாஷிங்டன் சுந்தர் சொன்ன 'மேஜிக்' வார்த்தை... "அது தான் நாங்க ஜெயிக்க காரணமா இருந்துச்சு"!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மகத்தான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி, இளம் வீரர்களைக் கொண்டு சாதனை படைத்தது. கடைசி டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என இருந்த போது போட்டி டிராவில் முடியும் என்று தான் அனைவரும் கருதினர்.
ஆனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும், ரிஷப் பண்ட் 89 ரன்களும் அடித்து இந்திய அணியை கடைசி நாளில் வெற்றி பெறச் செய்தனர். இந்த போட்டியில் ஆறாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இறுதியில் அதிரடியாக ஆடினர்.
இந்நிலையில், இந்த வெற்றிக்கு முன்னதாக இருவரும் என்ன உரையாடினார்கள் என்பது குறித்து பண்ட் தற்போது கூறியுள்ளார். 'நாங்கள் இருவரும் இலக்கை எட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அப்போது என்னை கவனமாக ஆட வேண்டும் என்றும், தான் அதிரடியாக ஆடலாம் என்றும் சுந்தர் என்னிடம் தெரிவித்தார். "மச்சான், நான் டார்கெட்டை பார்த்து ஆடுகிறேன்" எனவும் என்னை அறிவுறுத்தினார். அதன்பின், அவர் வேகமாக சில பவுண்டரிகளை அடித்து நெருக்கடியை ஓரளவு குறைத்தார். அந்த ஆலோசனை தான் போட்டி எங்கள் பக்கம் திரும்ப உதவியது' என பண்ட் தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆல் ரவுண்டரராக ஆடிய வாஷிங்டன் சுந்தர், இரண்டாவது இன்னிங்ஸின் இறுதியில், அதிரடி காட்டி மற்ற வீரர்களின் நெருக்கடியை குறைத்து வெற்றிக்கு அவர் மிக முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.