'இந்தியா' 'டீம்'க்கு வந்த பெரிய 'சிக்கல்'??... 'நடராஜனுக்கு' கிடைக்கப் போகும் 'வாய்ப்பு'??... சோதனை கட்டத்தில் 'இந்திய' அணி!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் மீதமுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வருவது அணிக்குள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மூன்றாவது போட்டிக்கு முன்னரே காயத்தின் காரணமாக தொடரில் இருந்து விலகினர். ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் காயத்தால் அவதிப்பட்டதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. அதன் பிறகு, அவர் இரண்டாவது போட்டியில் களமிறங்கியிருந்த நிலையில், மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாதியில் வெளியேறினார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் தற்போது ஹனுமா விஹாரி மற்றும் பும்ரா ஆகியோர் கடைசி போட்டியில் காயம் காரணமாக விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளது முக்கியமான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது.
பும்ராவிற்கு பதிலாக கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அல்லது ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைத்து அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் அதே வேளையில் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் என முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாத இந்திய அணி, அதிக அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை எப்படி சமாளிக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.