"ஒரு 'முட்டாளா' தெரியுறேன்'ல..." மேட்ச் முடிஞ்சதும் அஸ்வினிடம் பேசிய 'டிம் பெயின்'... நடந்தது என்ன??!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணி வீரர்கள் அஸ்வின் - ஹனுமா விஹாரி இணை, விக்கெட்டுகள் எதுவும் விழாமல் தடுப்பாட்டம் ஆடி போட்டியை டிராவில் முடிய வழி வகுத்தனர். இவர்களின் சிறப்பான பேட்டிங்கிற்கு ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்த போட்டியில் அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆஸ்திரேலியா கேப்டனும் விக்கெட் கீப்பருமான டிம் பெயின், அவ்வப்போது ஸ்லெட்ஜிங் மூலம் அஸ்வினை சீண்டிக் கொண்டிருந்தார். அஸ்வினை சரியாக பேட்டிங் செய்ய விடாமல் அவரை திசை திருப்ப டிம் பெயின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அது மட்டுமில்லாமல், அஸ்வினை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிகிறது. ஆஸ்திரேலிய கேப்டனின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவரை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், இந்த சர்ச்சை செயல் குறித்து டிம் பெயின் முதல் முறையாக மன்னிப்பு கேட்டு மனம் திறந்து பேசியுள்ளார். 'நான் செயல்பட்ட விதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கேப்டனாக என்னுடைய அணியைச் சிறந்த முறையில் வழிநடத்த விரும்புகிறேன். நேற்று நல்ல தலைமை பண்பை நான் காட்டவில்லை எனபது தான் உண்மை.
ஆட்டத்திலுள்ள நெருக்கடியின் காரணமாக நான் அப்படி தவறாக செயல்பட்டேன். ஒரு மோசமான கேப்டனாக நேற்று நான் விளையாடியதை எனது அணி வீரர்களிடமும் கூறினேன். போட்டி முடிந்த பின்னர் அஸ்வினுடன் நான் பேசினேன். ஒரு முட்டாளாக கடைசியில் நான் உணர்ந்தேன் என அவரிடம் கூறினேன். அதன்பிறகு நாங்கள் சிரித்துக் கொண்டோம். அவருடன் மன்னிப்பையும் தெரிவித்தேன்' என டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பரிஸ்பேனில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.