"'ஃப்ளைட்'ல இருந்து எறங்குனதும் வீட்டுக்கு எல்லாம் போகல..." 'சிராஜ்' செய்த நெகிழ வைத்த 'செயல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியிருந்தது.
அதிலும் குறிப்பாக, கடைசி டெஸ்ட் போட்டியில், அனுபவ வீரர்கள் யாருமில்லாமல், இளம் வீரர்களை வைத்து பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த தொடர் முடிந்து அனைவரும் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா வந்தடைந்த வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், விமான நிலையத்தில் இருந்து நேராக தனது தந்தையின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று சிராஜின் தந்தை, நுரையீரல் நோய் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த சிராஜ், தந்தை மரணமடைந்த போது ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
தான் மீது மிகவும் பாசம் வைத்து, தான் இந்திய அணிக்காக ஆடுவதை பெரும் கனவாக கொண்டிருந்த தந்தையின் மறைவு, சிராஜை கடுமையாக பாதித்தது. இதனால் அவர் உடைந்து போன நிலையில், தந்தையின் உடலை பார்க்க இந்தியா வராமல், டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணி வெற்றி பெற தான் முக்கிய பங்காற்றுவதே தனது தந்தைக்கு செலுத்தும் அஞ்சலி என சிராஜ் கூறியிருந்தார். அது தான் தனது தந்தையின் ஆசையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய சிராஜ், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை (13 விக்கெட்டுகள்) வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்று, இந்திய அணி தொடரை வெல்ல பக்க பலமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.