'பேப்பர்ல இல்லாம இருக்கலாம், ஆனா க்ரவுண்ட்ல கோலிக்கே ‘தல’தான் கேப்டன்'..! புகழ்ந்து தள்ளிய சி.எஸ்.கே.வின் செல்லப்பிள்ளை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 28, 2019 01:47 PM
'பேப்பரில் இல்லையென்றாலும், கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் தோனி தான்' என்று பிரபல சி.எஸ்.கே. வீரர், தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் குடும்பத்தினருடன் சுற்றுலாவில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ரெய்னா கூறியதாவது, 'வீரர்கள் பெயர் அடங்கிய பேப்பரில் டோனி கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைதானத்தில் விராட் கோலிக்காக எம்.எஸ். டோனிதான் கேப்டனாக இருப்பார் என நினைக்கிறேன். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் இன்னும் இந்திய அணியில் தோனியின் பங்கு மாறவேயில்லை. பவுலர்களுக்கு ஆலோசனை கொடுப்பது, பீல்டிங் செட் செய்வது, என கேப்டனுக்கே கேப்டனாக செயல்படுகிறார்.
தோனி அணியில் உள்ள வரை கோலிக்கு ஒருகவலையும் இல்லை. இதை கோலியே ஒத்துக்கொள்வார்’ என்றார். மேலும், 'கோலி ஒரு நம்பிக்கையான வீரர், கேப்டன். அவருக்கு தனிப்பட்ட முறையில் இந்த உலகக் கோப்பை மிகப்பெரிய தொடராக இருக்கும். அவரின் பங்கு என்ன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர், வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். மற்றபடி எல்லாமே பாசிட்டிவ் ஆகத்தான் இருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு இதுவே சிறந்த அணி' என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
வரும் உலகக் கோப்பை தொடரில், முக்கிய வீரராக யார் இருப்பார் என்ற கேள்விக்குப் பதிலளித்த ரெய்னா, 'ஹர்திக் பாண்ட்யா, அவரால் பேட்டிங் செய்ய முடியும். முக்கிய கட்டத்தில் 6-7 ஓவர்கள் பந்துவீச முடியும். எந்த நிலையிலும் அவரால் களமிறங்க முடியும். இந்த உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை அவர் வென்றால்கூட அதில் ஆச்சர்யப்பட எதுவும் இருக்காது. ஐ.பி.எல். தொடரில் இருந்த ஃபார்மை அவர் உலகக் கோப்பைத் தொடருக்கு எடுத்துச்செல்வார் என்றால், அவர் நிச்சயம் கேம் சேஞ்சராக இருப்பார். அணி நிர்வாகமும் ஹர்திக் பாண்ட்யாவை அவரது ஸ்டைலில் விளையாட அனுமதிக்க வேண்டும்' என்றார்.
