"நடராஜனின் பெர்ஃபார்மன்ஸ் பாத்து சிலிர்த்து போய்... 'ஆஸ்திரேலியா' ஜாம்பவான் சொன்ன 'விஷயம்'... ஆத்தி, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லையே!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை தமிழக வீரர் நடராஜன் முதல் முறையாக பெற்றிருந்தார்.
ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் களமிறங்கிய நடராஜன், இரண்டு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அதே போல, முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நடராஜன், அடுத்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அதிக ரன்கள் போன நிலையில், நடராஜன் மிக சிக்கனமாக பந்து வீசி அசத்தியிருந்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், யார்க்கர் பந்துகளால் கவனம் ஈர்த்த நடராஜன், தற்போதைய தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சர்வதேச போட்டியில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே மிக வேகமாக முன்னேற்றம் கண்டுள்ள நடராஜனை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், பந்து வீச்சு ஜாம்பவானுமான மெக்ராத் பாராட்டியுள்ளார்.
'நடராஜனின் பந்து வீச்சைக் கண்டு மிகவும் அசந்து போயுள்ளேன். இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி கண்டுபிடித்த அற்புதமான வீரர். இதே ஃபார்முடன் இனிவரும் போட்டிகளில் அவர் தொடர வேண்டும்' என தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், MRF அறக்கட்டளை சார்பான போட்டியில் நடராஜனை கண்டதில் இருந்து அவர் தற்போது அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளார் என குறிப்பிட்ட மெக்ராத், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மிக வேகமாக தன்னை செயல்படுத்திக் கொண்டார் என்றும், இனிமேல் விக்கெட்டுகளுக்காக அவர் யார்க்கர் பந்துகளை மட்டும் நம்ப வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.