‘உங்களவிட 2 மடங்கு நான் விளையாடிருக்கேன்’.. ‘சாதிச்சவங்கல முதல்ல மதிக்க கத்துக்கோங்க’.. விளாசி தள்ளிய பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 04, 2019 11:16 AM

தொலைக்காட்சி வர்ணனையார் சஞ்சய் மஞ்சரேகரின் விமர்சனத்துக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

Ravindra Jadeja slams Sanjay Manjrekar on Twitter

12 -வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 -ல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேகர் மீது பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை தொடருக்கான வர்ணனையாளராக தேர்வான சஞ்சய் மஞ்சரேகர், தனது சொந்த விருப்பு வெறுப்புகளை தொலைக்காட்சியில் பேசி வருவதாக பலரும் குற்றம் சாட்டினர். குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த சஞ்சய் மஞ்சரேகரை வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தோனியின் ரசிகர்கள் பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் டுவிட்டரில் கோரிக்கை வைத்தனர். முன்னதாக ஐபிஎல் தொடரிலும் இதேபோல் தோனியை விமர்சித்து கடுமையான சிக்கலுக்கு மஞ்சரேகர் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகக்கோப்பையில் விளையாடிவரும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பற்றி மஞ்சரேகர் விமர்சனம் செய்திருந்தார். அதில் ஜடேஜா போல் அவ்வப்போது அணியில் இடம் பெரும் வீரர்களுக்கு நான் ரசிகன் இல்லை என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நீங்கள் விளையாடியதைக் காட்டிலும் இரு மடங்கு போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.