‘ஓய்வை அறிவித்த வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து'... 'அதிர்ச்சியை வெளிப்படுத்திய சிஎஸ்கே'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 03, 2019 05:41 PM

ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்ததற்கு, சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

Iceland Cricket offers Ambati Rayudu permanent residency post WC snub

இந்திய அணியின் ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக, உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகிய போதிலும், மாற்று வீரர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த அம்பதி ராயுடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. உலகக் கோப்பையில் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தபோது,  கடுப்பான அம்பதி ராயுடு, ‘உலகக் கோப்பை போட்டியைக் காண 3-டி கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்’ என தான் புறக்கணிக்கப்பட்டதை குத்திக் காட்டும் வகையில் ட்விட்டர் பதிவை வெளியிட்டார்.

இதற்கு இந்திய அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்படும் ராயுடுவுக்கு, ஆதரவளிப்பதற்காக ஐஸ்லாந்து நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்வந்தது. இவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்தில் இந்திய அணியில் இணைந்துள்ள மயங்க் அகர்வால் ஒட்டுமொத்தமாக 72.33 என்ற சராசரியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்தியுள்ளார். எனவே எங்களது இந்த ஒப்பந்தத்தை படிக்க ராயுடுவிற்கு '3-டி' கண்ணாடிகள் தேவைப்படாது. நீங்கள் எங்களுடன் வந்து இணையுங்கள் ராயுடு".

மேலும் ராயுடு அவ்வாறு தங்கள் நாட்டுக்காக விளையாடும் பட்சத்தில், அவருக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமை வழங்குவதாகவும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். இதையடுத்து, சிஎஸ்கே அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தப் பிறகே, அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடிந்தது. ‘ராயுடு வேண்டாம், இது உண்மையாக இருக்கக் கூடாது’ என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.