‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 25, 2019 10:31 AM
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக நேரம் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெஸ்ட் இண்டீஸ் வீரர் வித்தியாசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து கேப்டன் ஹோல்டரும், கம்மின்ஸும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3 -ம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 222 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில் 95 நிமிடங்கள் களத்தில் நின்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் கம்மின்ஸ் 46 பந்துகளை சந்தித்தார். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஜடேஜாவின் ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினார். மைதானத்தில் அதிக நேரம் நின்று டக் அவுட்டாகி வெளியேறியது சாதனையாகி உள்ளது. இதற்கு முன்னர் 1999 -ம் ஆண்டு நியூஸிலாந்து வீரர் ஜெஃப் அலாட் 101 நிமிடங்கள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.