'தல’க்கே பனிஷ்மெண்ட்டா? ஐபிஎல் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 12, 2019 12:05 PM

ஜெய்ப்பூரில் நடந்த 12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியதில் சென்னை அணியின் கேப்டனும், தல’யுமான தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்க்குள்ளாகியுள்ளது.

IPL-MS Dhoni let off with 50% fine after arguing with umpire\'s call

ஆட்ட தொடக்கத்தில் முதலில் பேட் செய்த  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் 152 என்கிற இலக்குடன் இறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆனால் முன்னதாக கடைசி ஓவரில் சான்ட்னர் எதிர்கொண்ட பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றதால், லெக் அம்பயர் , நோ-பால் கொடுத்தார். எனினும் இந்த நோ பாலை ஸ்டிரைட் அம்பயர் ரத்து செய்தார். இந்த குழப்பங்களுக்கு இடையில் ஒரு முடிவு எடுத்து இறுதியாக நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிரவுண்டுக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, இதனைக் கண்டதும் இறங்கி வந்து ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள்  என்று ஆக்ரோஷமாக கேட்டு வாதம் செய்யத் தொடங்க, பென் ஸ்டோக்ஸுக்கும் தோனிக்கும் இடையில் வாக்குவாதம் சூடாகி, நோபால் தராத நடுவர்களின் மீதான கோபத்துடன் தோனி வெளியேறினார்.

எனினும் ஸ்பிரிட் ஆப் தி கேம் என்கிற வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் தோனி, இதுபோன்று இதற்கு முன் வாக்குவாதம் செய்ததில்லை. ரசிகர்களுக்கும் இது புதிதாகவே இருந்தது. தனது ஆட்டமில்லாதபோது, களத்துக்குள் இறங்கி தோனி இப்படி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ததால், ஐபிஎல் விதிகளின்படி, லெவல்-2 குற்றமாகக் கருதப்பட்டு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.