'ஓல்டு ஒயின் போல'.. அவ்வளவு பக்குவம்.. நெகிழும் 'தல' தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Apr 10, 2019 06:21 PM
தனது அணி வீரர்கள் இருவரை, ஓல்டு ஒயினைப் போல பக்குவப்பட்டவர்கள் என்று சி.எஸ்.கே. கேப்டன் மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரிலேயே மிகவும் சீனியர் வீரர்கள் அதிகம் உள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். இரண்டு வருடத் தடைக்குப் பின்னர், 2018 ஐ.பி. எல். தொடரின் போது 30 வயதுக்கும் அதிகமான வீரர்கள் அடங்கிய அணியை, சி.எஸ்.கே. நிர்வாகம் தேர்வு செய்தபோது பலரும் கிண்டல் செய்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதை சீனியர் சூப்பர் கிங்ஸ் என்று நெட்டிசன்கள் கலாய்த்தார்கள். ஆனால், கடந்த ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. பெரும்பாலோனோர் 30 வயதைக் கடந்தவர்கள். இதில் இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் இருப்பதிலே அதிக வயதுடைய சீனியர்கள். இளம் வயது வீரர்கள் குறைவாகவே சென்னை அணியில் உள்ளனர்.
இருப்பினும் சென்னை அணி தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் வெற்றிகளை குவித்து வருகிறது. நடைபெற்ற 6 போட்டிகளில் 5 -ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சுழற்பந்து வீச்சில் சீனியர்களான இம்ரான் தாஹிரும், ஹர்பஜன் சிங்கும் மிகவும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை சாய்த்து வருகின்றனர்.
ஐ.பி.எல் லீக்கில் இம்ரான் தாஹிர் 9 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுகளும் இதுவரை எடுத்துள்ளனர். கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் இருவரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்தனர். ரன்களையும் கட்டுப்படுத்தினர். போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி, 'ஹர்பஜன் சிங்கும், இம்ரான் தாஹிரும் ஓல்டு ஒயின் போல் பக்குவப்பட்டவர்கள்' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.
மேலும், 'ஹர்பஜன் சிங்கும், தாஹிரும் வயதானவர்கள். அவர்கள் ஒயின் போன்றவர்கள். ஓல்டு ஒயின் எவ்வாறு பக்குவப்பட்டு இருக்குமோ அதுபோல், அவர்கள் நன்றாகப் பக்குவப்பட்டுவிட்டார்கள். எந்தப் போட்டியில் ஹர்பஜன் விளையாடினாலும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். போட்டியில் நெருக்கடி ஏற்படும் நேரங்களில் இம்ரானை பந்துவீச அழைப்பேன். அவர் சிறந்த முறையில் பந்துவீசுவார். ஒட்டு மொத்தமாக பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது' என்று தோனி தெரிவித்தார்.