கிறிஸ் கெயிலின் கோரிக்கையையும் நிராகரித்த ஐசிசி... தோனி க்ளவுஸ் சர்ச்சைக்கு முன்பே சிக்கிய கெயில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 10, 2019 11:38 AM
தோனிக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் 12-வது உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலானப் போட்டியின்போது, இந்திய வீரரும், விக்கெட் கீப்பருமான தோனி, பாரா மிலிட்டரியின் பாலிதான் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்து விளையாடினார். இதனை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
ஐசிசியின் கவனத்திற்கு சென்றதையடுத்து, விக்கெட் கீப்பிங் கிளவுசில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று அதன் நிர்வாகம் கூறியது. முதலில் விளக்கம் அளித்த பிசிசிஐ, பின்னர் ஐசிசியின் வேண்டுகோளை ஏற்றது. இதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில், தோனியின் விக்கெட் கீப்பிங் கிளவுசில் பாலிதான் முத்திரை இடம்பெறவில்லை.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசின் அதிரடி மன்னன் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. யுனிவர்சல் பாஸ், சிக்சர் மன்னன் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், தனது பேட்டில் பாஸ் என்ற லோகோவை பயன்படுத்த அனுமதி கேட்டார். ஆனால் ஐசிசி அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ஐசிசி விதிகளின்படி வீரர்கள் பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம் மற்றும் இன உணர்வுகள் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.