"ஒரு 'சின்ன' பையன் 'நம்ம' ஓவர்ல அடிச்சுட்டானேன்னு... 'வாழ்நாள்' முழுக்க 'ஆண்டர்சன்' 'ஃபீல்' பண்ணுவாரு..." 'இந்திய' வீரரை புகழ்ந்த 'ஹர்பஜன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதன் பிறகு ஆடிய இந்திய அணி 365 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி, 135 ரன்களில் ஆல் அவுட்டானதால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்திய அணி பேட்டிங் செய்த போது, தொடக்க வீரர்கள் பெரிதாக சோபிக்காமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணிக்கு சற்று நெருக்கடி உருவான நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி, இந்திய அணியை மீட்டனர். அதிலும் குறிப்பாக, ரிஷப் பண்ட் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார்.
மொத்தமாக 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 101 ரன் அடித்து ரிஷப் பண்ட் அவுட்டானார். அதிலும், ஆண்டர்சன் வீசிய பந்தை, ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் பவுண்டரியாக மாற்றியது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுப் பொருளாகியுள்ளது. உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரின் பந்தில் அப்படி ஒரு ஷாட் அடித்ததை, இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் ஷாட் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Wow @RishabhPant17 😂😂😂 pic.twitter.com/389yVwgXPz
— Andrew Flintoff (@flintoff11) March 5, 2021
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங், 'அப்படி ஒரு ஷாட் அடிக்க உண்மையில் ஒரு தனி கெத்து வேண்டும். நிச்சயம் பண்ட் அடித்த ஷாட்டை, அவ்வளவு எளிதில் ஆண்டர்சனால் மறந்து விட முடியாது. அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் அடித்த சிறந்த ஷாட்களில் பண்ட் அடித்த ஷாட் நிச்சயம் இடம்பெறும்.
அது மட்டுமில்லாமல், தன்னைப் போன்ற ஒரு பெரிய பந்து வீச்சாளரின் பந்தில், இளம் வீரர் ஒருவர் அப்படி ஒரு ஷாட் அடித்துள்ளார் என்பதை நினைத்து, நிச்சயம் ஆண்டர்சன் வேதனைப்படுவார். முன்னதாக, இங்கிலாந்தின் 205 ரன்களைக் கடக்கும் வரை, பண்ட் நிதானமாக ஆடினார்.
அதன் பிறகு, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அணியின் நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுப்பைத் தனது தோளில் ஏற்றிக் கொள்கிறார்' என ஹர்பஜன் சிங், இளம் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.