களத்தில் மோதிக் கொண்ட 'கோலி' - 'ஸ்டோக்ஸ்'.. "அதுக்கு முன்னாடி இதான் நடந்துச்சு..." விளக்கமளித்த 'சிராஜ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, 205 ரன்களில் ஆல் அவுட்டானது. தொடர்ந்து, ஆடி வரும் இந்திய அணி, தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முன்னதாக, முதல் நாளான நேற்று, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 13 ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் இறுதி பந்து பவுன்சராக சென்ற நிலையில், அதனை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ், அந்த பந்தை அடிக்காமல் தவிர்த்தார்.
இதனையடுத்து, இந்த ஓவர் முடிந்த பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரிடையே வார்த்தை போர் வெடித்தது. பின்னர், போட்டி நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இது பற்றி பேசிய சிராஜ், 'அந்த ஓவரை வீசிவிட்டு, ஃபீல்டிங் செய்ய நான் சென்ற போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டோக்ஸ், என்னை சீண்டும் வகையிலான வார்த்தைகளைப் பேசினார். இதுபற்றி, உடனே நான் விராட் கோலியிடம் புகார் கூறினேன். அவரும் ஸ்டோக்ஸிடம் இதுபற்றி விளக்கம் கேட்கச் சென்ற நிலையில், நடுவர்கள் வந்து சமரசம் செய்தனர்' என சிராஜ் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
