‘யாரக் கேட்டு கேப்டனா இருக்காரு..?’ எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்.. விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 29, 2019 05:13 PM
உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட உள்ளது.

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியதைத் தொடர்ந்து விராட் கோலியின் கேப்டன்ஷிப் மீதும் கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தற்போது விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பதவிக்காலம் முடிந்தும் எப்படி மீண்டும் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினர் நொண்டி வாத்தைப் போல் செயல்படுகின்றனர். உலகக் கோப்பை தொடரில் சரியாக விளையாடாத கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோரை அணியிலிருந்து நீக்கியுள்ளவர்கள் கேப்டன்ஷிப்பில் சரியாகச் செயல்படாத விராட் கோலியை மட்டும் ஏன் இன்னும் கேப்டனாக வைத்துள்ளார்கள்? எங்களுக்கு தெரிந்தவரையில் விராட் கோலியின் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடர் வரை மட்டுமே இருந்தது. அப்படி இருக்கும்போது மீண்டும் கேப்டன் தேர்வு குறித்து கூட்டம் எதுவுமே நடத்தாமல் கோலி எப்படி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்துப் பேசியுள்ள அவர், “இப்போது உள்ள தேர்வுக்குழுவின் கடைசி அணித்தேர்வு இதுவாகவே இருக்கும். விரைவில் இந்திய அணிக்கு புதிய தேர்வுக்குழு நியமிக்கப்படும். அந்த தேர்வுக்குழுவிலாவது ஏற்ற நபர்கள் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
