'கொழந்தைய காப்பாத்துங்க ப்ளீஸ்'.. 2 மணி நேரத்தில் ரெஸ்பான்ஸ்.. கொண்டாடப்படும் அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 09, 2019 03:31 PM

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை காப்பாற்ற, ஃபேஸ்புக் பக்கம் மூலம் உதவிகேட்ட இளைஞருக்கு, அடுத்த இரண்டு மணிநேரத்தில் அனைத்து உதவிகளையும் செய்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார் கேரள சுகாதாரப் பெண் அமைச்சர்.

Minister takes action to save one day old baby in response to FB post

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அமைச்சரவையில் உள்ள பெண் அமைச்சர்களில் ஒரவரான சைலஜா, கன்னூரை சொந்த ஊராகக் கொண்ட இவர், தற்போது கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். முன்னதாக இவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக வேலை செய்ததால் அம்மாநிலம் முழுவதும் சைலஜா டீச்சர் என்றே அறியப்படுகிறார்.  இவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கில் கமெண்ட்கள் வரும்.

அவ்வாறு தனது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த, 10 வகுப்பு மாணவர், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததைப் பாராட்டியிருந்தார் அமைச்சர் சைலஜா. இந்தப் பதிவுக்குக் கீழே ஜியாஸ் மாதசேரி என்ற இளைஞர் ஒரு கமென்ட் செய்திருந்தார். அதில், `எங்களுக்கு வேறு வழியே இல்லாமல்தான் இந்த தகவலை உங்களுக்கு அனுப்புகிறேன். இன்று காலை என் சகோதரிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக பிறந்த குழந்தைக்கு இதயத்தில் குறைபாடு உள்ளது.

முதலில் குழந்தையை எடுகராவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறினர்.  அதன்படி நாங்கள் அங்கு அழைத்துச் சென்றோம். அங்கு சில சோதனைகளுக்குப் பிறகு `இங்கு எதுவும் செய்ய முடியாது கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனை அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா திருநல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ எனக் கூறிவிட்டனர். நாங்கள் இரு மருத்துவமனைகளையும் தொடர்பு கொண்டதற்கு அங்குக் குழந்தையை அனுமதிக்கப் படுக்கை இல்லை எனக் கூறிவிட்டனர்.

டீச்சர், மேலே கூறப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு எங்கள் குழந்தையை அழைத்துச் செல்லாவிட்டால் அவளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்' என தனது செல்போன் எண்ணை குறிப்பிட்டு இரவு 7. 40 -க்கு பதிவு செய்திருந்தார். இதைக் கவனித்த அமைச்சர் சைலஜா இரவு 10.28 அந்த கமெண்ட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவரின் பதிவில், 'விரைவாகவே உங்கள் கமெண்டை நாங்கள் பார்த்துவிட்டோம்.

சுகாதாரத் துறை இயக்குநருக்கும், ஹிருதயம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கும் குழந்தை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஹிருதயம் திட்டத்தின் கீழ் குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். மிக விரைவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும் கொச்சியில் உள்ள ஹிருதயம் திட்டம் செயல்படும் மருத்துவமனையான லிசி மருத்துவமனையில்  வழங்கப்படும். மேலும் குழந்தையை அழைத்துச் செல்ல நீங்கள் இருக்கும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதில் அளித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில், குழந்தை கொச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த இரண்டு பேரின் ஃபேஸ்புக் பதிவும் கேரள சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags : #KERALAMINISTER #HELP #VIRAL