‘அவரு இது எங்களுக்கு வேண்டானுதான் சொன்னாரு..’ இறுதிப் போட்டி குறித்து மனம்திறந்துள்ள பிரபல வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 17, 2019 04:13 PM
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது கடைசி ஓவரில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, பென் ஸ்டோக்ஸ் பந்தை தட்டிவிட்டு இரண்டாவது ரன் ஓடும்போது மார்க்வுட் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி ட்ராவில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டு அதுவும் ட்ராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து அதிக பவுண்டரி அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்தப் போட்டியின்போது கடைசி ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க பென் ஸ்டோக்ஸ் ஓடியபோது பேட்டில் தவறுதலாகப் பட்ட த்ரோ பவுண்டரிக்குச் சென்றது. இதுவே போட்டி ட்ராவில் முடிய முக்கிய காரணமாகவும் அமைந்தது. இதற்காக கேன் வில்லியம்ஸனிடம் பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் களத்தில் இருந்த நடுவர்களிடம் பென் ஸ்டோக்ஸ், “கடைசி ஓவர் த்ரோ மூலம் கிடைத்த 4 ரன்களை நீக்க முடியுமா? எங்களுக்கு அது வேண்டாம்” எனக் கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். மேலும் ஐசிசியின் விதியில் உள்ளதால் அதை மாற்ற முடியாது என நடுவர்கள் அவரிடம் கூறியதாகவும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.