‘ஓவர் த்ரோவில் இங்கிலாந்து அணிக்கு’... ‘6 ரன்கள் கொடுத்தது தவறு’... ‘பிரபல அம்பயர் கருத்து’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 15, 2019 09:57 PM
உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து வெற்றியைப் பறித்த ஓவர் த்ரோவுக்கு அம்பயர் வழங்கிய, 6 ரன்கள் தவறானது என புது சர்ச்சை எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டி 'டை' ஆக, அடுத்து நடந்த சூப்பர் ஓவரும் 'டை' ஆனது. இதனையடுத்து பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக ஆட்டத்தின் போது இங்கிலாந்து வெற்றிக்கு 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தில் 2 ரன்கள் ஓடி எடுக்கப்பட்ட நிலையில், ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி சென்று, இங்கிலாந்துக்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து போட்டியை 'டை' செய்ய இந்த ரன்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கியது அம்பயர்களின் தவறு என ஓய்வு பெற்ற அம்பயர் சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘பரபரப்பான கட்டத்தில், அந்த ஓவர் த்ரோவுக்கு, 6 ரன்கள் வழங்கியது முழுக்க அம்பயர்களின் தவறு. கப்தில் த்ரோ வீசிய போது, இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லவில்லை. அதனை அம்பயர்கள் 2-வது ரன்னாக கருத்தில் கொண்டிருக்க கூடாது. எனவே அதற்கு ஒரு ரன் மட்டுமே வழங்கி, ஓவர் த்ரோவுக்கு 4 ரன்கள் என மொத்தம் 5 ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும்.
மேலும் வீரர்கள் 'கிராஸ்' செய்யாததால், அடுத்த பந்தை ஸ்டோக்ஸ் எதிர் கொண்டிருக்க கூடாது. அடில் ரஷித் தான் சந்தித்திருக்க வேண்டும். இது அம்பயர்களின் தவறு. ஆனால் இதனால் தான் இங்கிலாந்து வென்றது எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐசிசி.,யின் சிறந்த அம்பயர்களான விருதை 5 முறை வென்றவரான டஃபெல் கூறிய இக்கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.