‘பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி’... ‘சச்சின் கூறிய கருத்து’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 17, 2019 09:21 AM
பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்காமல், 2-வது சூப்பர் ஓவர் மூலம், உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவை தீர்மானித்திருக்கலாம் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சூப்பர் ஓவரும் சமனில் முடிய, அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘பெரிய போட்டிகளில் இதுபோன்ற கையாள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், இரண்டு அணிகள் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்காமல், 2-வது சூப்பர் ஓவர் முறையை கடைப்பிடித்திருக்கலாம்.
உலகக் கோப்பையில் மட்டுமல்ல. அனைத்து ஆட்டங்களுமே முக்கியமானது. கால்பந்தைப் போல், கூடுதல் நேரத்துக்கு ஆட்டம் சென்றால் அது பெரிய பிரச்னை கிடையாது’ என்றார். உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கான விதிகள் மாற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், ‘முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு, தொடர் முழுவதும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியநிலையில், அவற்றுக்கு பயன் கிடைக்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும்’ என்றார்.
உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியை 7-வது வரிசையில் களமிறக்கியது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘நான் தோனியை, அவரது வழக்கமான வரிசையான 5-வது வரிசையில் தான் களமிறக்கியிருப்பேன். இந்திய அணி அப்போது இருந்த சூழ்நிலை மற்றும் அவருக்கு இருக்கும் அனுபவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இன்னிங்ஸை கட்டமைக்க, அது தோனிக்கான நேரம். ஹர்திக் பாண்டியா 6-வது இடத்திலும், அவரைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 7-வது இடத்திலும் களமிறங்கியிருக்க வேண்டும்’ என்றார்.
