இந்திய கொடியை அணிந்து கொண்டு.. கால்பந்து போட்டி பாக்க வந்த அர்ஜென்டினா பெண்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடும் இந்தியர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய கிழக்கு நாடான கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருப்பதால், ரசிகர்களுக்கும் சிறந்த பொழுது போக்காக நடப்பு கால்பந்து உலக கோப்பைத் தொடர் இருந்து வருகிறது.
அதே போல, கால்பந்து போட்டிகளுக்கென்று சாதாரண ரசிகர்களாக இல்லாமல், ஒரு படி மேலே போய் பல வித்தியாசமான விஷயங்களையும் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்தியாவில் கால்பந்து போட்டிகளை அதிகம் பின்பற்றும் கேரளா மாநிலத்தில், உலக கோப்பை தொடர் நெருங்கும் சமயத்தில், மெஸ்ஸி, ரொனால்டினோ உள்ளிட்ட பிரபல கால்பந்து வீரர்களுக்கு கட்அவுட் வைத்திருந்தனர்.
அது மட்டுமில்லாமல், கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் உள்ள 17 பேர் சேர்ந்து கால்பந்து உலக கோப்பை போட்டிகளை காண 23 லட்சம் ரூபாய் செலவு செய்து புதிய வீடு ஒன்றை வாங்கி இருந்ததும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி இருந்தது. அதே போல, சமீபத்தில் கேரள பெண் ஒருவர் கார் மூலம் தனியாக கத்தார் வரை கால்பந்து போட்டியைக் காண சென்றிருந்ததும் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது உடலில் இந்தியாவின் மூவர்ண கொடியை போர்த்திக் கொண்டு நிற்பது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த லெட்டி எஸ்டீவ்ஸ் (Leti Estevez) என்ற பெண், கத்தாரில் கால்பந்து போட்டியைக் காண வந்த சமயத்தில் இந்திய கொடியை தன் மீது அணிந்துள்ளார். இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த யாதில் எம் இக்பால், லெட்டி என்ற அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகை இந்திய நாட்டின் கொடியுடன் இருப்பதை கவனித்துள்ளார். அப்போது அவரிடம் இதற்கான காரணத்தை யாதில் கேட்க, இந்தியர்கள் அர்ஜென்டினா அணியை அதிகம் நேசிப்பதால், இந்திய கொடியை அணிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல , அர்ஜென்டினா, போர்ச்சுகல் என எந்த நாட்டு ரசிகரை கண்டாலும், இந்தியர்கள் கால்பந்து போட்டிகளில் எந்த அளவு ஈடுபாடுடன் இயங்குகிறார்கள் என்பது தொடர்பான புகைப்படங்களையும் காட்டுவதாக யாதில் அந்த வீடியோவில் தெரிவிக்கிறார். அர்ஜென்டினா உள்ளிட்ட நாட்டின் ரசிகர்கள், இந்தியர்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பதை போல ஒரு நாள் மெஸ்ஸி, நெய்மர் அல்லது ரொனால்டோ கூட தெரிந்து கொண்டு இந்திய காலபந்து லீக் போட்டிகளில் விளையாடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் யாதில் எம் இக்பால்.
இது தொடர்பான வீடியோ அதிகம் வைரலான நிலையில், யாதில் எம் இக்பாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லெட்டி, அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும், மெஸ்ஸிக்கும் இந்தியர்கள் காண்பிக்கும் ஆதரவுக்கு நன்றிகளையும் தெறிவித்துள்ளார். கால்பந்து விளையாட்டில் கடல் கடந்து மக்கள் காட்டிய இந்த அன்பு தொடர்பான பதிவுகள், தற்போது உலக அளவில் கால்பந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.