140 மில்லியன் வருசத்துக்கு முன்னாடியே வாழ்ந்த ஒரு உயிரினம்.. ஆராய்ச்சியாளர்களை மிரள வைத்த புதைப்படிவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலேயே மிகப்பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான டைட்டனோசரின் (Titanosaur) புதைப்படிவம் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அர்ஜெண்டினா ஆராய்ச்சியாளர்கள், ‘140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்தைக் கொண்ட, செடி கொடிகளை சாப்பிடும் டைனோசர் வகைகளில் ஒன்றான “நிஞ்ஜாட்டியன் சபாடாய்” (Ninjatitan zapatai) வகையைச் சேர்ந்தது இந்த டைட்டனோசர். இதன் முழுமையடையாத எலும்புக்கூடுதான் நெயுக்யூனின் (Neuquen) தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள்தான் முதன்முதலில் அழிந்துபோனதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்’ என தெரிவித்துள்ளனர்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சி எழுத்தாளரான பப்லோ கல்லினா (Pablo Gallina) இதுகுறித்து கூறுகையில், ‘டைனோசர்களின் புதைபடிவங்கள் உலகில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்குமுன் பழமையானது என பதிவு செய்யப்பட்ட டைனோசரைக் காட்டிலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைப்படிவம் உலகிலேயே மிகவும் பழமையானது’ என அவர் கூறியுள்ளார்.
இந்த நிஞ்ஜாட்டியன் டைனோசர்கள் மிகவும் பெரிய உருவம் கொண்டவை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 65 அடி உருவமுடையது. ஆனால் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற டைனோசர்கள் கிட்டத்தட்ட 115 அடி கூட இருந்திருக்கிறது என பப்லோ கல்லினா கூறுகிறார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டைட்டனோசரின் எலும்புக்கூட்டை வைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
