"இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவேன்.. என் பையோ பிக் படத்தில் இவர்தான் ஹீரோ".. மனம் திறந்த நடராஜன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,"மாரத்தான் என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்குமானது. மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் கொடுக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ரன்னிங் தேவைப்படுகிறது. சின்ன சின்ன கிராமங்களில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். பெண்கள் தற்போது பல துறைகளில் மேலே வந்து கொண்டிருக்கின்றனர். கிராமங்களை சேர்ந்த பெண்கள் இன்னும் பெரிய இடங்களுக்கு செல்ல வேண்டும்" என்றார்.
தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் குறித்து பேசிய அவர்,"நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் என் முழு திறமையை காட்டுவேன். அதன் மூலமாக இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாவேன் என நம்புகிறேன்" என்றார். அண்மையில் நடராஜனின் பையோ பிக் படம் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதில் அளித்த அவர்,"என்னுடைய வாழ்க்கை வரலாற்று படம் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு தான் எடுக்கப்படும். சிவகார்த்திகேயன் தான் அதை தயாரித்து நடிக்க இருக்கிறார்" என்றார்.
2020 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார் நடராஜன். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தற்போது ஹைதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடி வருகிறார். இதுவரையில் 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் நடராஜன் சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
