"எழுதி வச்சுக்கங்க.. அடுத்த 10 வருஷத்துல இந்த பையன் பெரிய ஆளா வருவான்".. இளம்வீரர் மீது நம்பிக்கை தெரிவித்த யுவராஜ் சிங்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் இந்திய அணி பல்வேறு தொடர்களில் விளையாட இருக்கிறது. இருப்பினும், இந்த தொடர்களில் சாதிக்கும் இளம் வீரர்களுக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என்பதால் யார் யார் இந்தியாவுக்காக களமிறங்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கிறார். அப்போது, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களில் முக்கிய தேர்வாக ஷுப்மன் கில் இருப்பார் என தான் நம்புவதாக யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் கில் மிகச்சிறந்த வீரராக அறியப்படுவார் எனவும் யுவராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பேசிய யுவராஜ் சிங்,"சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் கில் நன்றாக விளையாடி வருகிறார். ஆகவே அடுத்த 10 ஆண்டுகளில் அவர் மிகச்சிறந்த வீரராக இருப்பார் என நம்புகிறேன். அதேபோல் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக கில் இருப்பார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. நாட்டின் விளையாட்டு துறைக்கு உதவ முடிந்தால் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கில் 57.25 சராசரியுடன் 687 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடக்கம். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சதம், ஆஸ்திரேலியாவில் காட்டிய அதிரடி என கில் நல்ல ஃபார்மில் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பேசிவருகின்றனர். முன்னதாக கொரோனா பரவலின் போது, கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு யுவராஜ் சிங் பயிற்சி அளித்து வந்தார். ஆஸி சுற்றுப்பயணத்தில் யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சி பெரிதும் உதவியாக இருந்ததாக கில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | யாத்திரை நடுவே பாஜக தொண்டர்களுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி.. வீடியோ..!

மற்ற செய்திகள்
