‘வெளிய போனா உங்களையும் கூட்டிட்டுதான் போவோம்..’ பாத்தீங்கள்ல கடைசி மேட்ச.. எச்சரிக்கை செய்த கேப்டன்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 24, 2019 03:01 PM
உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி பல தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்று வருகிறது.

உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அதிக புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.
பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியளித்து வங்கதேசம் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்புடன் இருக்கிறது. 6வது இடத்திலுள்ள வங்கதேசம் ஆப்கானிஸ்தானுடன் சவுத்தாம்டன் மைதானத்தில் மோதுகிறது. இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டி முக்கியமானதாக உள்ளது. முதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் போராடும் நிலையில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைக்க வேண்டிய சூழலில் உள்ளது வங்கதேசம்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நைப், “இந்திய அணிக்கு எதிரான போட்டியில் எங்களுடைய ஆட்டத்தைப் பார்த்து இருப்பீர்கள். ஆடுகளம் மட்டும் ஒத்துழைத்தால் நாங்கள் வங்கதேசம் மட்டுமல்ல அனைத்து அணிகளுக்குமே சிக்கலாகத்தான் இருப்போம். இங்கிருந்த ஆடுகளங்கள் வித்தியாசமாக இருந்ததால் முதல் மூன்று போட்டிகளில் திணறினோம். கடைசி இரண்டு ஆடுகளங்களில் நாங்கள் முழுத்திறனையும் காட்டி விளையாடி வருகிறோம். எங்களிடம் இருக்கும் ஸ்பின்னர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். நாங்கள் மூழ்கிவிட்டோம் (வெளியேறிவிட்டோம்) ஆனால் உங்களையும் (வங்கதேசம்) எடுத்துதான் செல்வோம்” என சிரிப்புடன் எச்சரித்துள்ளார்.
