"இதுக்கு நீங்கள்தான் தகுதியானவர்கள்!".. கனடா பிரதமரின் 'மாஸ்' அறிவிப்புக்கு குவியும் 'நெகிழ்ச்சி' பாராட்டுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 10, 2020 08:05 AM

கொரோனாவின் தாக்கம் உலகையே புரட்டிப் போட்டு கொண்டு வரும் நிலையில் இந்த நேரத்தில் மக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் அத்தியாவசிய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

you people are eligible, canada PM justin trudeaus new announcement

உலகை ஆட்டுவித்துக் கொண்டு வரும் இந்த கொரோனாவின் கொடூரம் ஒவ்வொரு தனிநபர் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. பலர் குடும்பத்துடன் வீட்டிலேயே நேரத்தை செலவிடுவது, ஆன்லைன் மீட்டிங், ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்தே வேலை, அதிகரிக்கும் மனிதநேயம், உணவுப் பொருள்களின் அவசியம் என பலவேறு விஷயங்கள் பேசுபொருளாகியுள்ளன.  இந்த கொரோனா சூழ்நிலையிலும் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் தன்னலமற்ற பணிகள் பாராட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும் இவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பல சிறப்பு செயல்களை செய்து வரும் நிலையில் இது போன்ற அத்தியாவசிய பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கனடா பிரதமர் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

கனடாவில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தில் கனடா அரசு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தில் மேற்கூறிய அத்தியாவசிய ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 1,800 டாலர் (இந்திய மதிப்பில் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்) என இருக்கும் வகையில் வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்றைய தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், “நீங்கள் உங்கள் உயிரை பணயம் வைத்து, நம் நாட்டை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளீர்கள். ஆனால் இந்த வேலைக்கு நீங்கள் குறைந்தபட்ச ஊதியத்தையே பெறுகிறீர்கள். ஆக நீங்கள்தான் உண்மையில் சம்பள உயர்வுக்கு தகுதியானவர்கள். இந்த தொற்று நோய்களின் மூலம் நாம் காணும் விஷயம், நம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்படக் கூடியவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களே நம் சமூகத்தின் செயல்பாட்டுக்கும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்!” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவின் அத்தியாவசிய பணியாளர் சங்கத்தில் உள்ள சுமார் 60 ஆயிரம் பேர் அந்நாட்டு பிரதமரின் இந்த அறிவிப்பை வெகுவாக வரவேற்றுள்ளனர். இதுபற்றி பேசிய கனடா அத்தியாவசிய பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெர்லின் ஸ்டீவர்ட், முன்னணியில் நின்று கொரோனாவுக்கு எதிராக பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்கள் அனைவரும் தற்போது கொரோனாவால் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் அவர்கள் வேலை செய்யும் அனைத்து துறைகளிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இந்த நேரத்தில் பிரதமரின் இந்த அறிவிப்பு நிம்மதியை தருவதாகவும், ஆனால் இது வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல் பணியாளர்கள் தங்கள் பாக்கெட்டில் பணத்தை பார்க்கும் சூழ்நிலை உண்டாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.