சீனாவைத் தொடர்ந்து பீகாரில் ஒரு பெண்ணுக்கும் ராஜஸ்தானில் ஒரு வாலிபருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரசாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பின்பே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.
இதற்கிடையே, சீனாவில் இருந்து பாட்னா வந்த பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பாட்னா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
