அப்டிலாம் 'ஈஸியா' நெனைச்சுராதீங்க... 'அதிர்ச்சி' தகவலை பகிர்ந்த 'வைரஸ்' வேட்டைக்காரர்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை மிகவும் எளிதாக நினைக்க வேண்டாம் என, உலகப்புகழ் பெற்ற வைரலாஜிஸ்ட் பீட்டர் பியோட் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

எபோலா வைரஸை கண்டறிந்த பீட்டர் பியோட்(71) வைரஸ் துப்பறிவாளர், வைரஸ் வேட்டைக்காரர் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இவரையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் இவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர் வாழ்வா? சாவா? போராட்டத்தில் வென்று தற்போது வீடு திரும்பியிருக்கிறார். எனினும் அவருக்கு நுரையீரல் கோளாறுகள் அதிகரித்து இருப்பதால் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''மனோதிடத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருந்த என்னை கொரோனா வைரஸ் உலுக்கிப்போட்டுவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்ததைவிட, அதன் விளைவு மோசமாக உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசி தயாரித்து உலகம் முழுவதும் அளிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே!
அப்படியே தடுப்பூசி கண்டுபிடித்தாலும், உலக அளவில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்பாத முரண்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. அதிகமான மக்கள் தடுப்பூசிக்கு எதிராக நின்றால், நாம் ஒருபோதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவரவே முடியாது,'' என தெரிவித்து இருக்கிறார்.
