'கொரோனாவின் ஒரிஜினல் கோர முகம்'... 'சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்த கர்ப்பிணி'... எதிரிக்கு கூட நடக்க கூடாத முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்வாழ்க்கையில் சில சம்பவங்கள், என்ன தான் எதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு இப்படி நடக்கக் கூடாது எனப் பலர் சொல்வது உண்டு. அதுபோன்ற ஒரு கோர நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா ருத்திர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான தினசரி கூலித் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதனிடையே சிந்து மாகாணத்தில் உள்ள மிர்பூர் காஸ் மாவட்டத்தின் ஜூடோ நகரில் வசித்து வருபவர் அல்லா பக்ஸ். இவருடைய மனைவி சுக்ரா பீபி. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சுக்ரா பீபி மீண்டும் கர்ப்பமானார். அல்லா பக்ஸின் குடும்பம் மிகுந்த ஏழ்மை நிலையிலிருந்த போதும், அவர் தினமும் வேலைக்குச் சென்று மனைவி, மற்றும் குழந்தைகளை நன்றாகக் கவனித்து வந்துள்ளார். இதனிடையே எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அல்லா பக்ஸ் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த பணமும் தீர்ந்து போக, ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார்கள்.
இதற்கிடையே கர்ப்பிணி மனைவியை வைத்துக் கொண்டு அவளுக்கு எப்படி சாப்பாடு கொடுக்காமல் இருப்பது என, சாப்பாட்டிற்காகப் பல வழிகளில் முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காமல் போனது. இந்த கொடுமையின் உச்சக்கட்டமாக ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாமல், கர்ப்பிணி சுக்ரா பீபி பட்டினியால் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். ஆசையாய் பார்த்து வந்த மனைவி பட்டினியால் இறந்து விட்டாளே என, கணவர் அல்லா பக்ஸ் கதறி அழுதார்.
இந்தச்சூழ்நிலையில் மனைவியின் உடலை அடக்கம் செய்யக் கூட, பணம் இல்லாமல் தவித்து வந்த அல்லா பக்சுக்கு உள்ளூர் வாசிகள் பணம் திரட்டி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கர்ப்பிணி இறந்துள்ள சம்பவம், கல் நெஞ்சையும் கரைய செய்யும் கொடுமையின் உச்சமாகும்.