பாலியல் வன்கொடுமை.. 5 பேரால் எரிக்கப்பட்ட இளம்பெண்.. 'சிகிச்சை' பலனின்றி மரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 07, 2019 01:28 AM
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் எனும் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த மார்ச் மாதம் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தப்பியோடி விட, மற்றொருவர் சிறையில் இருந்து கடந்த 30-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை நீதிமன்றத்துக்கு அந்த பெண் சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபின் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண் 112-க்கு கால் செய்து தன்னுடைய நிலையை எடுத்துச்சொல்லி உதவி கேட்டுள்ளார். மேலும் பற்றியெரிந்த தீயுடன் உதவி கேட்டு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது சுமார் 90% தீக்காயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்டார். தொடர்ந்து அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
90% காயங்கள் இருந்தததால் அந்த பெண்ணை சிகிக்சைக்காக விமானத்தில் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை குறித்து டெல்லியில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சுனில் குப்தா , ''தீ காயங்களால் பாதிக்கப்பட்ட பெண் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தற்போது உயிர் காக்கும் கருவிகள் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24-48 மணிநேரங்கள் கழித்தே அவரின் நிலை பற்றி உறுதியாகக் கூறமுடியும்,'' என தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்றிரவு 11.40 மணிக்கு டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். 11.10 மணியளவில் அந்த பெண் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டடதாகவும், மருத்துவர்கள் அவரை உயிருடன் காப்பாற்ற போராடிய முயற்சிகள் தோல்வியடைந்து 11.40 மணியளவில் அவர் இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பிரேத பரிசோதனைகளுக்கு பின் இறுதிச்சடங்கிற்காக அவரின் உடலை நாளை(சனிக்கிழமை) அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கவுள்ளனர்.