BERTH ல லக்கேஜை வைக்கும்போது திடுக்கிட்ட பயணி.. கொஞ்ச நேரத்துல களேபரமாண ரயில்.. அடுத்த ஸ்டேஷன்லேயே மொத்த பேரையும் கீழ இறக்கிய அதிகாரிகள்....!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ரயிலில் இருந்த பாம்பை கண்டு பயணிகள் அதிர்ச்சியடையவே, ரயில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
பரபரப்பு
கடந்த புதன்கிழமை இரவு, திருவனந்தபுரம் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். அந்த ரயிலின் S5 பெட்டியில் இருந்த ஒரு பயணி தனது உடமைகளை வைக்க எழுந்த போது லோவர் பெர்த்தில் வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அது பாம்புதான் என்பது விளங்கவே, அருகில் இருந்தவர்களை அவர் எச்சரித்திருக்கிறார். ரயிலில் பாம்பு இருப்பதை அறிந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிடவே அந்த பெட்டியே பரபரப்பாகியது.
இதனையடுத்து உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அடுத்த ஸ்டேஷனான கோழிக்கோட்டில் ரயிலை நிறுத்த திட்டமிட்டுள்ளனர் அதிகாரிகள். ஆனால், அதற்குள் அந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயினர். இதனிடையே பயணி ஒருவர் அந்த பாம்பை கையால் பிடித்திருக்கிறார். அதனை கண்ட சக பயணிகள் பாம்பை விட்டுவிடுமாறும், அதனை கொல்ல வேண்டாம் எனவும் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அந்த பாம்பை பிடித்தவர் அதனை விட்டுவிட்டார்.
வனத்துறை அதிகாரிகள்
இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஏற்பாட்டினால் இரண்டு பாம்பு பிடிக்கும் வீரர்கள் கோழிக்கோடு ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். ரயில் வந்ததும் உடனடியாக அந்த பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறக்கியுள்ளனர் அதிகாரிகள். தொடர்ந்து ரயிலில் ஏறிய பாம்பு பிடிக்கும் வீரர்கள் தீவிரமாக தேடியும் அவர்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே, பயணி ஒருவர் அந்த பாம்பினை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை பாம்பு பிடிக்கும் வீரர்களிடம் அவர் காட்டியுள்ளார். அப்போது அது சாதாரண பாம்பு தான் என்றும்,ரயில் பெட்டியில் உள்ள துளை வழியாக அது வெளியேறியிருக்கலாம் எனவும் அந்த வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக அந்த துளைகள் ரயில்வே ஊழியர்களால் அடைக்கப்பட்டது. பின்னர், ரயில் கிளம்பிச் சென்றிருக்கிறது.
ரயில் பெட்டிக்குள் பாம்பு இருந்ததால் பயணம் 1 மணி நேரத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த ரயிலில் இருந்த மற்ற பயணிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Also Read | "அந்த உரிமை பெத்த அம்மாவுக்கு மட்டும் தான் உண்டு".. பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!