"ரயிலை ஹைஜாக் பண்ணிட்டாங்க.. சீக்கிரம் காப்பாத்துங்க"..படபடப்பில் பயணி போட்ட ட்வீட்.. ரயில்வே நிர்வாகம் சொல்லிய உண்மை..இதுக்கா இவ்ளோ களேபரம்.?
முகப்பு > செய்திகள் > இந்தியாபயணி ஒருவர் ரயில் கடத்தப்பட்டதாக ட்வீட் செய்தது, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கார்நாடகா- டெல்லி இடையிலான ரயில் ஹைஜாக் செய்யப்பட்டு விட்டதாகவும் உடனடியாக காப்பற்றுமாறும் பயணி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுவும் ரயில்வே நிர்வாகம், அந்த பகுதி ரயில்வே மேனேஜர் ஆகியோரை டேக் செய்து தங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் அவர். இந்த ட்வீட் கொஞ்ச நேரத்திலேயே வைரலானது. இதுபற்றி பலரும் கேள்வி கேட்கத் துவங்கிய நிலையில் உடனடியாக ரயில்வே நிர்வாகம் காரணத்தை சொல்லியிருக்கிறது. இதனால் பயணிகள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
ட்வீட்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணா பெஹெரா என்பவர் கர்நாடக மாநிலத்தில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் மஜ்ரி சந்திப்புக்கும் சிதாஃபல் மண்டிக்கும் இடையே திசைமாறிச் செல்வதைக் கவனித்த கிருஷ்ணா, அதனால் பீதியடைந்திருக்கிறார். மேலும் உடனடியாக ட்விட்டரில் இதுகுறித்தும் பதிவு செய்திருக்கிறார்.
கிருஷ்ணா தனது ட்வீட்டில், ரயில் எண்-12650 கடத்தப்பட்டுவிட்டதாகவும் உடனடியாக உதவி செய்யுமாறும் குறிப்பிட்டு IRCTC மற்றும் செகந்திராபாத் கோட்ட ரயில்வே மேலாளரையும் டேக் செய்திருக்கிறார். மேலும், #train hijacked #Help என்ற ஹேஷ்டாக்குகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
என்ன நடந்தது?
கிருஷ்ணாவின் இந்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறது. அவரது பதிவில்,"ரயில் கடத்தப்படவில்லை. ரயில் திருப்பி விடப்பட்டுள்ளது. பீதி அடைய வேண்டாம்" என ரயில்வே நிர்வாகம் கமெண்ட் செய்திருக்கிறது. அதனை தொடர்ந்து,"காசிபேட்டாவிற்கும் பால்ராஷாவிற்கும் இடையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. எனவே, ரயில் ஐதராபாத் பிரிவு வழியாக திருப்பி விடப்பட்டது. பீதியடைய வேண்டாம்" என மற்றொரு கமெண்ட்டையும் போட்டிருக்கிறது.
இதனையடுத்து, கிருஷ்ணா தனது ட்வீட்டை நீக்கியுள்ளார். இருப்பினும் இதுபோல ரயில் திசை திருப்பப்பட்டால் உடனடியாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
ரயில் கடத்தப்பட்டதாக பயணி ஒருவர் ட்வீட் செய்யப்போக, ரயில்வே நிர்வாகம் அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பதட்டமடைய வேண்டாம் என தெரிவித்தது குறித்து சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.