‘தல’ தோனியின் ‘அதிரடி முடிவு..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 20, 2019 03:18 PM
இந்திய அணி அடுத்ததாக விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி தாமாகவே விலகி இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தோனி தாமாகவே வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் அடுத்த இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், “வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகியுள்ள தோனி அடுத்த 2 மாதங்கள் தனது பாராமிலிட்டரி படையுடன் பணியாற்ற உள்ளார். இதற்காகவே அவர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக 2011ஆம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் பதவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் 2015ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் சிறப்பு பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாராமிலிட்டரி சிறப்புப் படையின் ‘பலிதான்’ முத்திரை பதித்த கையுறையை தோனி பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
