'உயிரையே' காப்பாத்திய... அந்த ஒரு 'செல்ஃபி' .. நண்பர் செய்த அற்புதமான காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 27, 2019 12:20 PM
இந்தியாவில் ஒரே ஒரு செல்ஃபியால் உண்டான ஏராளமான விபத்துக்கள் உள்ளன. எதிர்பாராதவிதமாக ஒரு செல்ஃபி கூட உயிரைப் பறிக்கும் நிலைக்கு மனிதர்களைத் தள்ளிவிடும் அளவுக்கான துர் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டுவரை, செல்ஃபியால் 250க்கும் மேற்பட்டோர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் இந்த சூழலில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், சங்கநேசரி என்கிற இடத்தில் ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ரயில்நிலைய தண்டவாளத்தில், தனது மனைவியுடன் தலைவைத்து படுத்தபடி நபர் ஒருவர், நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம் என்று அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலான செல்ஃபி ஒன்றை எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த சமயம், கேரளா எக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருந்த அவரது நண்பர் ஒருவர், அந்த செல்ஃபி படத்தின் பின்புறம் ஓரமாகத் தெரிந்த மைல் கல்லில் இருந்த எண்களை வைத்து, தான் பயணம் செய்துகொண்டிருந்த ரயிலின் என்ஜின் இயக்குநரிடம் காண்பித்து, அது எந்த ரயில்வே ஸ்டேஷனோ, அந்த ரயில்வே ஸ்டேஷனை அலெர்ட் செய்து, அங்கு காவல்துறையை அனுப்பி, அவர்களின் தற்கொலையைத் தடுத்திருக்கிறார்.
உயிரைப் பறிக்கும் செல்ஃபிக்களின் கதைகளையே அதிகம் பார்க்கக் கூடிய நிலையில், ஒரு செல்ஃபி உயிரைக் காப்பாற்ற உதவியுள்ள இந்த சம்பவம் கேரளாவை கவனிக்க வைத்துள்ளது.
