'கேரளாவுக்கு வந்த சோதனை'... 'யாரும் பதற்ற படாதீங்க'... நாங்க 'தயாரா இருக்கோம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jun 04, 2019 11:03 AM
கேரளாவில் நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில்,யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கேரளாவில் பரவிய நிபா வைரஸ் அந்த மாநிலத்தையே நிலைகுலைய செய்ததது.அந்த வைரஸ் மூலம் பரவிய காய்ச்சலுக்கு 17 பேர் வரை உயிரிழந்தனர். இதனிடையே தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருவதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,அதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார்.
இருப்பினும் முழுமையான சோதனை முடிவுகள் வெளிவந்த பின்பு தான் உறுதியான தகவலை வெளியிட முடியும் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் ''தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் பொது மக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை.எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது.மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது.எனவே மக்கள் பதற்றமடைய வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திரிச்சூரைச் சேர்ந்த 8 பேர் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் தகவல் வெளியானது.ஆனால் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக இன்னும் உறுதி படுத்தப்படவில்லை.
இதனிடையே,நிபா வைரஸ் அணில் மற்றும் வவ்வால்கள் மூலம் பரவும் என்றும், எனவே அணில்கள், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.